Header Ads

மீண்டும் கேப்டனான தோனி.. கேப்டனாக 200வது ஒருநாள் போட்டி.. ரசிகர்கள் கொண்டாட்டம்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடியது.

இந்த போட்டியில், ஆசிய கோப்பை இந்திய அணிக்கான கேப்டன் பதவியில் இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வெடுக்க கேப்டனாக தோனி பொறுப்பேற்றுள்ளார்.

தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்த இந்த விஷயம், மேலும் ஒரு சிறப்பையும் பெற்றுள்ளது.


கேப்டன் தோனியின் 200வது போட்டி


தோனி தன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது சரியாக 199 ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பதவி வகித்து இருந்தார். இந்த நிலையில், இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அதனால், இன்று ஆப்கன் அணிக்கு எதிராக நடக்கும் போட்டி, முக்கியமற்ற போட்டியாக இருக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் ஓய்வெடுத்து உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மாவும் இல்லாத நிலையில், அணியை வழிநடத்தும் வாய்ப்பு மீண்டும் தோனிக்கு கிடைத்தது. இது தோனி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது.


2 ஆண்டுகளுக்கு பின் கேப்டன்


சுமார் 696 நாட்களுக்கு பின் தோனி மீண்டும் கேப்டன் பதவியை பெற்றுள்ளார். 2016இல் தோனி தன் ஒருநாள் போட்டி மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கேப்டன் பதவியை ஏற்றுள்ள தோனிக்கு கேப்டனாக இது 200வது போட்டி என்பது இயல்பாக அமைந்தது என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார்.


கேப்டன் தோனி பெற்ற வெற்றிகள்


தோனி கேப்டனாக, இந்த போட்டிக்கு முன்பு வரை 199 போட்டிகளில் 110 வெற்றி, 74 தோல்வி, 4 டை, 11 போட்டிகள் முடிவு இல்லாதவை என 59.57 சதவீத வெற்றியை பெற்றுள்ளார். தோனிக்கு முன் கங்குலிதான் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்ற பெயரை பெற்று இருந்தார். அதிக வெற்றிகளில் கங்குலியை முந்திய தோனி இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்ற இடத்தை அலங்கரித்தார்.


விலகக் காரணம் என்ன? 


டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியை 2015ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய தொடர் பாதி நடந்து கொண்டு இருந்த போது துறந்தார். அடுத்து 2016 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக செயல்படாததை அடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து தாமாகவே விலகினார்.

No comments